கார் ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு: சல்மான்கான் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு

கார் ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு: சல்மான்கான் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு

0 151

பாலிவுட் நடிகர் சல்மான் கான் (49) கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பரில் மும்பை, பாந்த்ரா பகுதியில் ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்த வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.

முன்னதாக அரசு தரப்பு தனது இறுதி வாதத்தின் போது, விபத்து நடந்தபோது காரை சல்மான்கான் ஓட்டவில்லை. அவரது டிரைவர் தான் காரை ஓட்டினார் என்ற சல்மானின் வாக்குமூலத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. விபத்து நடைபெற்ற போது காருக்குள் மூன்று பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். 4வது நபர் யாரும் காருக்குள் இருக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் பிரதீப் காரத் தனது வாதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் கடந்த 12 வருடங்களாக 4வது நபர் காருக்குள் இருந்ததாக தெரிவிக்காமல், தற்போது தெரிவிப்பது ஏன் என அவர் கேள்வியெழுப்பினார். ஆனால் சல்மானின் தரப்பு தனது இறுதி வாதத்தின் போது, அவர் காரை ஓட்டவில்லை என தொடர்ந்து வாதம் செய்தது.

இந்த வழக்கில் ஆதாரங்களும், சாட்சியங்களும் சல்மானுக்கு எதிராக உள்ளதால் அவருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.