பிரிட்டன் இந்துக்கள் சிலர் கோமியம் குடிப்பதேன்?

  0 139

  லண்டனில் பசுவின் கோமியம் கடைகளில் விற்கப்படுவதை பிபிசியின் ஆசிய பிரிவு சேவை கண்டறிந்துள்ளது.

  லண்டனில் இருக்கும் தெற்காசியக்கடைகளில் கோமூத்ரா என்கிற பெயரில் விற்கப்படும் இந்த பசுவின் கோமியத்தை பிபிசி செய்தியாளர் காசு கொடுத்து வாங்க முடிந்தது.

  இந்த கடைகள் எல்லாமே உணவுப்பொருட்களையும் விற்கும் கடைகள். ஒரு கடையில் இந்திய துணைக்கண்டத்தின் அன்றாட உணவான ரொட்டிகளுக்கு அருகில் இந்த கோமியமும் அடுக்கி வைத்து விற்கப்பட்டது.

  “இந்துக்கள் இதை மத காரணங்களுக்காக வாங்கிச் செல்கிறார்கள். உதாரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அதிர்ஷ்டத்தை வரவழைக்க இந்த கோமியம் தெளிக்கும் மத சடங்குகள் நடப்பது வாடிக்கை” என்று இதை விற்கும் கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

  கடைகள் மட்டும் இந்த கோமியத்தை விற்கவில்லை. வாட்ஃபோர்டில் இருக்கும் ஹரேகிருஷ்ணா கோவிலான பக்திவேதாந்தா மனோரில் இருக்கும் பால்பண்ணையில் பசுவின் கோமியம் பக்தர்களுக்காக சேகரித்து விற்கப்படுகிறது.

  இந்த கோவிலின் நிர்வாக மேலாளர் கவுரி தாஸ் வடிகட்டப்பட்ட கோமியத்தை தாங்கள் 1970களின் ஆரம்பத்தில் இருந்தே விற்பதாக தெரிவித்தார்.

  தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதை பூஜைக்காகவும் மருத்துவத்துக்காகவும் தூய்மைப்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவதாக அவர் கூறினார். அந்த கோவிலில் இருக்கும் பிரதீப் என்பவர் கோமியத்தைக் குடித்துக்காட்டினார். அது கொஞ்சம் கசப்பு மருந்துபோல இருப்பதாக அவர் கூறினார்.

  ஒரு நாளைக்கு மூன்று முறை கோமியம் குடிப்பதாக தெரிவிக்கும் பிரதீப், தனது செரிமானத்தை மேம்படுத்துவதாகவும் அல்சர் வராமல் தடுப்பதாக்வும் ஒட்டுமொத்தத்தில் தனது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கூறினார்.

  இது குறித்து அறிக்கை மூலம் கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் உணவுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பேச்சாளர், “பசுவின் சிறுநீரை மனிதர் உட்கொள்ள விற்பது சட்டவிரோத செயல். அதேசமயம் உடலின் மேலே பூசுவதோ, தெளிப்பதோ உணவாக கருதமுடியாது என்பதால் இதன் விற்பனை உணவு சட்டங்களின் கீழ் வராது. ஆனால் இதை வேறு சில சட்டங்கள் மூலம் கையாளலாம்” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

  கோமியம் விற்கப்படும் பாட்டில்களின் மேல் இந்தி மொழியில் இது பசுவின் கோமியம் என்றும் இது மதப்பயன்பாட்டுக்கானது என்றும் எழுதப்பட்டுள்ளது.

  ஹரே கிருஷ்ணா கோவிலின் ஹரி தாஸ் இதை தாம் மனிதர்கள் உட்கொள்ள விற்பதில்லை என்று தெரிவித்தாலும் இதை என்ன செய்வது என்பது பக்தர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறினார்.

  மேலும் கோமியத்தைக் குடிப்பவர்களைப் பார்த்து விமர்சிப்பது போலியானது என்றும் அவர் தெரிவித்தார். “மனிதர்கள் மாட்டின் நாக்கையும் வாலையும் சாப்பிடலாம் ஆனால் அதன் கோமியத்தைக் குடிக்கக்கூடாது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”, என்றார் அவர்.

  இது குறித்து கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்கான அமைப்பின் பேச்சாளர், “பசுவின் கோமியத்தை உட்கொள்வதற்காக விற்பவர்கள் அது பாதுகாப்பானது தானா என்பதை உறுதி செய்யவேண்டும். தாங்கள் விற்கும் பண்டம் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க முடியாத பட்சத்தில் அதை அவர்கள் விற்கக்கூடாது”, என்று தெரிவித்தார். உணவுப்பண்டங்களுக்கு அருகே கோமியத்தை வைத்து விற்கக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

  லண்டன் கடைகளில் 50 மிலி லிட்டர் கோமியம் ஒரு பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு விற்கப்படுகிறது.

  செய்தி சேகரிப்பு: செஜ் அசார், பிபிசி ஏசியன் நெட் ஒர்க், லண்டன்.